×

காது கேளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

பழநி, டிச.27: பழநி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நகரத் தலைவர் காளீஸ்வரி, நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் கோயில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளோ, வணிக நிறுவனங்களோ இல்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணியில் அமர்த்தப்படும் தனியார் ஒப்பந்த பணியாளர்களில் 10% இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கித்தர வேண்டும்.
பழநியில் மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க திருக்கோயில் நிர்வாகம் ஒடம் ஒதுக்கித்தர வேண்டும். பழநி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வின்ச், ரோப்கார் ஆகியவற்றில் வழங்கப்படும் முன்னுரிமையை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். பழநி கோயிலின் சார்பில் செயல்பட்டு வந்த காதுகேளாதோர் பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

இதனால் காது கேளாத குழந்தைகள் கல்வி பயில்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூடப்பட்ட காதுகோளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பாதயாத்திரை தங்குமிடங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும். பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டிருந்தன.

Tags : Deaf Association ,
× RELATED அரிமளம், திருமயம் பெற்றோர்கள் கோரிக்கை காது கேளாதோர் சங்க ஆலோசனை கூட்டம்